Last Updated:
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்த பராசக்தி படத்திற்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, படம் வெளியீடு அனுமதி வழங்கியது.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து, செம்மொழி என்ற பெயரில் கதையாக எழுதி, 2010 ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அந்த கதையை பயன்படுத்தி பராசக்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாசிரியர் என பட இயக்குனர் சுதா கொங்குரா பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் புருஷோத்தமன் வாதிட்டார்.
பட இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி எஸ் ராமன், அரவிந்த் பாண்டியன் ஆகியோர், பராசக்தி படத்தின் கதையை 2020 ஆம் ஆண்டு இயக்குனர் பதிவு செய்திருக்கிறார். மனுதாரரின் செம்மொழி பட கதைக்கும், பராசக்தி பட கதைக்கும் திரைக்கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. படத்தின் கதையை திருடி இருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படத்துக்கு தடை விதித்தால் பெருத்த இழப்பு ஏற்படும் என வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பராசக்தி படம் தயாரிப்பு குறித்து 2024 ஆம் ஆண்டு தகவல் தெரிந்தும் 2025 டிசம்பர் மாதம் தான் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார் என கூறி படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என கூறி அந்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பராசக்தி படத்தின் கதையையும் செம்மொழி கதையையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யவில்லை என்பதால், அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீதிபதி உத்தரவிட்டு, பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
[]
Source link








