
Last Updated:
திருவள்ளூரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபர் சிசிடிவி இருந்தும் போலீசில் சிக்கவில்லை.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, அதே பகுதியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12 ஆம் தேதி பள்ளி முடிந்து ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தைக் கடந்து, மாந்தோப்பு வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சிறுமியைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தரையிலிருந்த மண்ணை வாரி மர்ம நபரின் முகத்தில் தூவிவிட்டு தப்பி ஓடிய சிறுமி, ஆடைகள் கிழிந்து முகத்தில் காயங்களுடன் வீட்டிற்கு வந்ததைக் கண்டு அவரது பெற்றோர் உடைந்தே போனார்கள்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை கும்மிடிப்பூண்டி எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியிடம் தனியாகச் சென்று விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். இந்நிலையில், 7 நாட்களாகியும் இதுவரை குற்றவாளியைக் கைது செய்யவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
காவல்துறையினர் ஒவ்வொரு நாளும் வரும் போது, 2 நாட்கள் கால அவகாசம் கேட்பதாகவும் வருத்தம் தெரிவித்தனர். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாயும் அவர் பிடிபடாமல் இருப்பது போலீசாருக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
July 18, 2025 9:22 PM IST