
Last Updated:
வீட்டில் தன்னைச் சுற்றி பெண்களே இருப்பதால் மகளிர் விடுதியின் வார்டனைப் போன்று தான் உணர்வதாகவும் நகைச்சுவையாக கூறினார்.
தனது வீட்டில் பெண்களே இருப்பதால், மகளிர் விடுதி வார்டன் போல தான் இருப்பதாக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். அதேநேரம், தனது பரம்பரை தொடர, ஆண் வாரிசை மகன் ராம் சரண் பெற்றெடுக்க வேண்டும் என்று பேசியதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டாரான சிரஞ்சீவியின் இந்தக் கருத்து தற்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் சிரஞ்சீவி. தனது காலத்தில் அதிக வசூல் படைத்த 8 திரைப்படங்களில் நடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 1992-ஆம் ஆண்டில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றதன்மூலம், அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலேயே ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவர்.
1980-ஆம் ஆண்டில் தெலுங்கு நகைச்சுவை நடிகர் அல்லு ராமலிங்கையாவின் மகள் சுரேகா-வை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியின் மகன்தான் பிரபல நடிகர் ராம் சரண். மேலும், சுஷ்மிதா, ஸ்ரீஜா என்ற இரு மகள்களும் உள்ளனர். உபாசனா-வை ராம் சரண் திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதேபோல, சிரஞ்சீவியின் மகள்களான சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகியோருக்கு தலா இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற பிரம்ம ஆனந்தம் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் சிரஞ்சீவி கலந்துகொண்டு பேசினார். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு பதில் அளித்த சிரஞ்சீவி, வீட்டில் தன்னைச் சுற்றி பெண்களே இருப்பதாக தெரிவித்தார். இதனால், மகளிர் விடுதியின் வார்டனைப் போன்று தான் உணர்வதாகவும் நகைச்சுவையாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது பரம்பரை தொடர, இந்த முறையாவது மகனைப் பெற்றெடுக்க வேண்டும் என்று மகன் ராம் சரணை தொடர்ந்து கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார். ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை கிடைத்துவிடுமோ என்று அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற சிரஞ்சீவியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: 18 வயதில் இணையத்தையே கலக்கிய பெண்.. பாலிவுட்டில் முதல் படமே பிளாப்.. யார் அந்த நடிகை?
பாலின வேறுபாடு என்பது 2025-ஆம் ஆண்டிலும் நீடித்து வருவதும், சிரஞ்சீவி போன்றோர், பழமையான பாலின வேறுபாட்டுடன் இருப்பது வேதனை அளிப்பதாகவும் ஒருவர் பதிவிட்டுள்ளார். தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி, சமத்துவம் குறித்து சிரஞ்சீவி எடுத்துரைக்கலாம் என்று ஒருவர் அறிவுரை கூறியுள்ளார்.
பேத்தியால் கூட, தனது பரம்பரையை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும், சிரஞ்சீவி போன்ற பிரபலங்கள் பொதுவெளியில் பேசும்போது கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். முற்போக்கு சிந்தனை அவசியம் என்றும் மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
February 12, 2025 1:40 PM IST
[]
Source link