
Last Updated:
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவை மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது.
வேலை வாங்கித் தருவதாக கூறி, மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
முந்தைய அதிமுக ஆட்சியில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி புகார்தாரரான ரவீந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல் துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து நீதிபதி வேல்முருகன், வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டி, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க முடியாது என கூறி காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.
Chennai,Tamil Nadu
April 29, 2025 12:46 PM IST
ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு : சிபிஐக்கு மாற்றிய உத்தரவை மாற்ற முடியாது ; உயர்நீதிமன்றம் மறுப்பு