
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே தையூர் கோமான் நகரில் திருப்பூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மோகன்ராஜ் என்பவரை 10 பேர் கொண்ட கும்பல் ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் போல் நடித்து நம்ப வைத்து கடத்திச் சென்று ரூபாய் 3 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் அவரிடமிருந்து 69 லட்சம் பெற்றுக் கொண்டு விடுவித்தனர். இது குறித்து, கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மோகன்ராஜ் என்பவர் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார் கடத்தல் சம்பவம் குறித்து கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமார் தலைமையில், ஆய்வாளர் கோவிந்தராஜ், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து கடத்திய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வெங்கடேசன் என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நில புரோக்கராக அறிமுகமாகி, மோகன்ராஜிடம் , பல இடங்கள் இருப்பதாக கூறி , இடங்களை காட்டியுள்ளார். இடம் வாங்கி அதை விற்பனை செய்யும் தொழிலில் மோகன்ராஜ் ஈடுபட்டு வருவதால் இந்த இடங்களை வாங்க முன்வந்துள்ளார்.
நிலத்தின் உரிமையாளர்க்கு காலில் அடிப்பட்டுள்ளதால் காரில் அமர்ந்திருப்பதாகவும் அவரை நீங்கள் வந்து பார்த்து பேசினால் இடத்தை முடித்துவிடலாம் என வெங்கடேசன் கூற மோகன்ராஜ் காரில் அமர்ந்திருந்த உரிமையாளர் சின்னாவை பார்க்க கார் அருகே சென்றதும் காரில் இருந்த இருவர் மோகன்ராஜ் கைகளை இழுத்து காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
காரில் துப்பாக்கி முனையில் 3 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். திருப்போரூரில் உள்ள மோகன்ராஜ் மனைவியை அழைத்து தனது வீட்டில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்துவருமாறு சொல்ல வைத்துள்ளனர். கடத்திய நபரை சினிமா பாணியில் சாலையிலேயே ஏரியா ஏரியாவாக சுற்றிக்கொண்டு இரவு 8 மணியளவில் 69 லட்சம் பெற்றுக்கொண்ட பின்னர் விடுவித்துள்ளனர்.
கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படையினர் புதுக்கோட்டையை சேர்ந்த குணசேகரன் (எ)சுரேஷ்(34), பழனிகுமார்(38), சென்னை வடபழனியை சேர்ந்த மணிகண்டன்(28), சீனிவாசன்(36), சரண்(23), பாலகிருஷ்ணன்(21) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தீயணைப்புதுறையில் பணியாற்றி வந்த சின்னா என்பவர் ஒரு கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதில் தீயணைப்பு பணியிலிருந்து நீக்கியுள்ளனர். அவரது தலைமையில் இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்துள்ளது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சினிமா துப்பாக்கி, ஒரு கத்தி, 5.25 லட்சம் பணம் ஆகியவற்றை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி கடத்தல் கூட்டத்தின் தலைவன் சின்னா, லேண்ட் புரோக்கராக நடித்த வெங்கடேசன் உள்ளிட்ட மேலும் சிலரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: ப.வினோத் கண்ணன்.
Chennai,Tamil Nadu
October 15, 2022 2:02 PM IST