
உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்ததால் நாட்டில் கோதுமை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. உக்ரைன் போர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி காரணமாக நாட்டில் கோதுமை விலை 5.81% உயர்ந்துள்ளது. சென்னையில் கோதுமை சில்லறை விலை ரூ.34, மும்பை – ரூ.49, கொல்கத்தா – ரூ.29, டெல்லியில் ரூ.27ஆகவும் உள்ளது.
இதற்கு முன் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் இவ்வளவு கடுமையாக கோதுமை மாவு விலை உயர்ந்தது. அப்போது கோதுமை உற்பத்தி சரிந்து கையிருப்பு கணிசமாக குறைந்ததால் விலை உயர்ந்தது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உக்ரைனில் ரஷ்யா போர் நடத்தியதால் சர்வதேச சந்தையில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள இந்தியாவில் இருந்து மார்ச் மாதத்தில் மட்டும் 70 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையானது வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் கோதுமை மாவின் சராசரி விலை மார்ச் மாதத்தில் 32.03 ரூபாயில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 32.38 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோதுமை மாவு விலை உயர்ந்துள்ளது உணவு விலை மற்றும் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. நடப்பு நிதியாண்டுக்கு 100 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மீதம் கையிருப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. கோதுமை விலை உயர்வை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக உயர் மட்ட அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
2021-22 பயிா் ஆண்டுக்கான கோதுமை உற்பத்தி வருகிற ஜூன் மாதத்துடன் நிறைவடையும். இந்நிலையில் ஏற்கெனவே 11.32 கோடி டன்னாக இருக்குமென மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 5.7 சதவீதம் குறைந்து 10.5 கோடி டன்னாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கோடைக்காலம் முன்கூட்டியே தொடங்கி பயிா் உற்பத்தியை பாதித்துவிட்டதால் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய நுகா்வோா் விவகாரங்கள், பொது விநியோகத் துறை செயலாளா் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளாா்.
2022-23 சந்தை ஆண்டில் (ஏப்ரல்- மாா்ச்) ல் அரசின் கோதுமை கொள்முதல் 1.9 கோடி டன் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சில மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் ஒப்பிடும்போது கோதுமையின் சந்தை விலை அதிகரிப்பு, விலையேற்றத்துக்கு வழிவகுக்கும் வகையில் விவசாயிகளும் வணிகா்களும் கோதுமை இருப்பை பதுக்கிவைப்பது, எதிா்பாா்த்ததைக் காட்டிலும் குறைவான உற்பத்தி போன்ற காரணங்களால், மத்திய அரசு கொள்முதல் செய்யும் கோதுமையின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.
கோதுமை
சரி இப்போது ஏப்ரல் முடிந்து மே மாதத்தில் கோதுமை மாவின் விலை தாறுமாறாக உயர்ந்ததற்கு என்ன தான் காரணம்?
கடந்த 5 வருட காலமாக ஒரு கிலோ கோதுமையின் விலை 24.28 ரூபாய்க்கு விற்பனை என்பது கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் நடைபெற்று வந்தது. தற்பொழுது ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதன் விளைவாக கோதுமையின் விலை 34.47 ரூபாய்க்கு கோதுமையின் விலை உயர்ந்திருக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 40 ஆயிரம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.
இலங்கைக்கு 40 ஆயிரம் டன் இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதி செய்து அதனால் தற்போது தற்போது இந்திய குடியுரிமை பெற்ற பொதுமக்களுக்கு, கிலோவுக்கு 10 ரூபாய் சுமையாக தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மைதா, ஆட்டா உள்ளிட்டவையும் கிலோவுக்கு 3 ரூபாய் வரை கூடியிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு கோதுமை தவிர்த்து இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ தமிழக முதலமைச்சர் முடிவெடுத்து உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசின் அனுமதி கோரியிருந்தார் அனுமதி கிடைத்தவுடன் 40 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட பொருட்களை அனுப்பும் நடவடிக்கையையும் துரிதப்படுத்தியுள்ளனர். இதனால் தற்போது தமிழகத்திலும் அரிசி விலை என்பதும் 13 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
அரிசி
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுகிறது என சமீபத்தில் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் எரிவாயு விலை என்பதும் கணிசமாக உயர்ந்து கொண்டு வருகிறது இதனை தொடர்ந்து தற்போது கோதுமை அரிசி ரவை, மைதா கோதுமை மாவு கிலோவுக்கு 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனை தமிழக மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் எனவும் யோசிக்க வைக்கிறது. இந்த திடீர் விலை உயர்வால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
அந்த வகையில் பழைய மற்றும் புதிய விலை பட்டியல் (ஒரு கிலோவுக்கு)
கோதுமையின் பழைய விலை.24/26
கோதுமையின் புதிய விலை.36/42
மைதாவின் பழைய விலை 25 / 27
மைதாவின் புதிய விலை 36/ 39
ரவையின் பழைய விலை 24/26
ரவா மாவின் புதிய விலை 34/37
பொன்னி அரிசி பழைய விலை 38.
தற்போதைய விலை 47.
இட்லி அரிசி பழைய விலை 24.
இட்லி அரிசி தற்போதைய விலை 27
பாஸ்மதி அரிசியின் பழைய விலை 68
பாஸ்மதி அரிசியின் தற்போதைய விலை 82
செய்தியாளர், கன்னியப்பன், அம்பத்தூர்.