
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த கோடை விழா நிறைவடைந்தது. கடந்த இரு மாதங்களில் ஊட்டிக்கு 6 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கடந்தாண்டை விட ஒரு லட்சம் பேர் வருகை குறைந்ததால் சுற்றுலா ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தினமும் வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் குளிரான காலநிலையை அனுபவிப்பதற்காக அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், கோடை விழா நடத்தப்படுகிறது.
இந்தாண்டு கோடை விழாவையொட்டி தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சி, மலர் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்தாண்டு கடந்த மாதம் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை 1.84 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் மொத்தம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 362 பேர் வந்திருந்த நிலையில், தற்போது 6 லட்சத்து 6 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த முறை கடந்த 2 மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
இதுகுறித்து சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது: கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கடந்தாண்டு இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு அறிவித்தது.
இதன் காரணமாகவும், கனமழை காரணமாகவும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதை தவிர்த்தனர். இ-பாஸ் நடைமுறை மேலும் தொடர்ந்தால், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறையும். இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை மட்டும் நம்பி தொழில் செய்து வருவோர் பலரும் பாதிக்கப்படுவர் என்றனர்.