
திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க பாராசூட் சாகச நிகழ்ச்சி மே 16 முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளை எவ்ளவு துாரம் பறக்க வைக்கலாம் என பாராசூட்டில் பறந்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படுகிறது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் அதிகமாக உள்ளன. கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து விரைவில் கோடை விழா மற்றும் 62 வது மலர் கண்காட்சி நடத்த உள்ளது.
கோடை காலத்தை முன்னிட்டு குளிர் சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க தற்போது தனியார் நிறுவனத்துடன் இணைந்து தமிழக சுற்றுலாத் துறை பாராசூட் நிகழ்ச்சியை மே 16 முதல் 19ம் தேதி வரை, கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் நடத்த உள்ளது.
சுற்றுலாத் துறை ஆய்வு: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பாராசூட் சாகச பயணத்தை மேற்கொள்ளலாம். வானில் ஒரு ரவுண்ட் வர ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், 15 முதல் 60 வயது வரையுள்ள இரு பாலரும் பங்கேற்கலாம். வானில் பறந்தவாறு கொடைக்கானலின் இயற்கை அழகை ரசிக்கலாம். காற்றின் திசை, சுற்றுலாப் பயணிகளை எவ்ளவு துாரம் பறக்க வைக்கலாம் என பாராசூட்டில் பறந்து ஆய்வு செய்து வருவதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.