
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று தொடங்கியது. இதில், 60 ஆயிரம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, கங்காரு ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி நேற்று 62-வது மலர்க் கண்காட்சியை திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், அரசு கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன், வேளாண் உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் ஐ.பெரியசாமி, கட்சிப் பணி மற்றும் அரசு நிகழ்ச்சிகள் காரணமாக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இரா.ராஜேந்திரன், அர.சக்கரபாணி மற்றும் பழநி எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்கவில்லை.
மலர்க் கண்காட்சியையொட்டி நடவு செய்யப்பட்டிருந்த சால்வியா, பிங்க் அஸ்டர், டேலியா உட்பட 26 வகையான 2 லட்சம் மலர்ச் செடிகள் பூத்துக் குலுங்கியதால் பூங்கா வண்ணமயமாக காட்சி அளித்தது. புவிசார் குறியீடு பெற்ற மலைவாழையால் நுழைவுவாயில் அமைக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் பூட்டு, கொடைக்கானல் மலைப்பூண்டு, ஆயக்குடி கொய்யா, பான்டா கரடி, பூனை, கங்காரு ஆகிய உருவங்கள் 60 ஆயிரம் கார்னேஷன் மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.

ஒரு டன் காய்கறிகளால் உருவாக்கப்பட்டிருந்த யானை, பஞ்சவர்ணக் கிளி, மலைக் குருவி, கொக்கு, புலி, விநாயகர், அணில் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன. மேலும், 30 வகையான கொய் மலர்கள் 10,500 தொட்டிகளில் இடம் பெற்றுள்ளன. அரசு துறைகள் சார்பில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு மஞ்சள் பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவ்வப்போது பெய்த சாரலில் நனைந்தபடி சுற்றுலாப் பயணிகள் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
தொடக்க விழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து படகுப் போட்டி, படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி நடைபெற உள்ளன. வரும் ஜூன் 1-ம் தேதியுடன் மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நிறைவு பெறுகிறது.