
கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ‘பேரா செயலிங்’ எனும் வான் சாகச நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வானத்தில் பாராசூட்டுடன் பறக்கும் அனுபவத்தை பெற்றனர்.
கொடைக்கானலில் கோடை சீசனுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். மலைப்பகுதியில் இயற்கை எழிலை ரசித்து செல்வதை கடந்து, ஏரியில் படகு சவாரி என்பது மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. இந்நிலையில் பொழுதுபோக்குக்கு மேலும் கூடுதல் அம்சங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இதையடுத்து மன்னவனூர் சுற்றுச்சூழல் பூங்காவில் ‘ஜிப் லைன்’ ஏற்படுத்தப்பட்டது. இது கொடைக்கானலில் இருந்து வெகுதொலைவில் மேல்மலை பகுதியில் அமைந்துள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இங்கு செல்வதில்லை. இந்நிலையில், கோடை சீசனுக்கு கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை இணைந்து வான் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பேரா செயலிங் எனும் வான் சாகச நிகழ்ச்சி மே 19-ம் வரை நடைபெறவுள்ளது. இதில், 15 வயது முதல் 60 வயது வரை உள்ளோர் பங்கு பெறலாம். இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.200 வசூலிக்கப்படுகிறது. பேரா செயலிங் நிகழ்ச்சியில் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வானத்தில் பாராசூட்டுடன் பறக்கும் அனுபவத்தை பெற்றனர்.
இதைவிட பெரிய மைதானத்தில் பேரா செயலிங் நடத்தினால் மற்ற இடங்களில் இருப்பதுபோல் அதிக தூரம், அதிக உயரம் என முழுமையான அனுபவத்தை பெறலாம் என்கின்றனர், பிற சுற்றுலாத் தலங்களில் பேரா செயலிங் செய்த சுற்றுலா பயணிகள். கொடைக்கானலில் பேரா செயலிங் நடைபெற்ற இடத்தில் போலீஸார், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதலுதவிக்கு மருத்துவத் துறையினரும் தயார் நிலையில் இருந்தனர்.