குன்னூரில் பெய்து வரும் மழை காரணமாக சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பூக்கள் ரம்மியமாக காட்சியளிக்கின்றன.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம் சிம்ஸ் பூங்கா. இந்த பூங்காவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை கவரும் வகையில், பல்வேறு மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு இரண்டாம் சீசனான அக்டோபர், நவம்பர் மாதத்துக்காக நடவு செய்யப்பட்டிருந்த 1.90 லட்சம் மலர் நாற்றுக்கள் மழையின் காரணமாக தற்போது பூத்துக் குலுங்குகின்றன.

அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளை தாயகமாக கொண்ட பால்சம், சால்வியா, பிளாகஸ், காஸ்மாஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம் போன்ற போன்ற மலர்கள் பூத்து சுற்றுலா பயணிகள் கண்ணுக்கு விருந்தாக காட்சி அளிக்கின்றன. பூக்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துச் செல்கின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் சிம்ஸ் பூங்கா களைகட்டி உள்ளது.






