
Last Updated:
விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதால், இதில் யார் யார் பெயரெல்லாம் சேர்க்கப்படும், முதல் குற்றவாளி யார் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த வழக்கு கடந்த மாதம் 24ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. விக்னேஷ் உடலில் 13 காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சட்டசபை கூட்டத்தில் விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என அறிவித்தார்.
இதனிடையே வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மூன்றாவது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விக்னேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர் காவல் படை காவலர் தீபக் ஆகிய 3 பேர் உட்பட தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கணபதி, எழுத்தர் முனாஃப், ஆயுதப்படை காவலர் கார்த்திக், தலைமை காவலர் குமார், பெண் காவலர் ஆனந்தி ஆகிய ஒன்பது நபர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகியுள்ளனர்.
அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் இன்று காலை 11 மணியிலிருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளதால், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக யார் சேர்க்கப்படுவார் என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறும். அதுமட்டுமல்லாமல் மூன்றாவது நாளாக இன்று காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட 9 பேர் ஆஜராகி இருப்பதால் இந்த வழக்கில எத்தனை பேர் சேர்க்கப்படுவார்கள் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், பொன்ராஜ், தீபக் ஆகிய 3 பேர் ஏற்கனேவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அம்மூவரும் முதலில் கைது செய்யப்படலாம் என சிபிசிஐடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.