
Last Updated:
கர்நாடகாவில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் இரு பேராசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் பயின்று வருகிறார். அந்தக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரியும் நரேந்திரா என்பவரிடம், மாணவி பாடங்கள் தொடர்பான சந்தேகங்கள் கேட்டுள்ளார். அதற்கு உனக்கு சிறப்பு வகுப்பு எடுக்கிறேன் என்று பேராசிரியர் உறுதியளித்துள்ளார். பின்னர் ஒருநாள் தன்னிடம் நிறைய புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் உள்ளதாக கூறியுள்ளார்.
அவற்றை வாங்கிக் கொள்வதற்காக தனது நண்பர் அனூப் என்பவரின் அறைக்கு வருமாறு செல்போனில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதை பார்த்த மாணவியும், பேராசிரியர் அழைத்த இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த பேராசிரியர், மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதை யாரிடமாவது கூறினால் உன் வாழ்க்கையே அழித்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
சில நாட்களுக்குப் பின் அதே கல்லூரியில் உயிரியல் பேராசிரியரான சந்தீப், அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்து மாணவி விலகி சென்றுள்ளார். ஆனால், ஏற்கனவே பேராசிரியர் நரேந்திராவுடன் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி சந்தீப் மிரட்டியுள்ளார்.
அதைக் காட்டியே சந்தீப்பும் தொடர்ந்து மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேராசிரியர்களின் அட்டூழியத்தை தாங்க முடியாத மாணவிக்கு, அவர்களின் நண்பர் அனூப்பும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அவர், பேராசிரியர்களுடன் மாணவி, தனது அறைக்கு வந்த வீடியோவை காட்டி மிரட்டி அத்துமீறியுள்ளார். ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாத அப்பாவி மாணவி, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்த கொடுமையை தனது பெற்றோரிடம் கூறி கண்ணீர் சிந்தியுள்ளார்.
அதைக்கேட்டு கொதித்தெழுந்த குடும்பத்தினர் கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தை அணுகியுள்ளனர். பின்னர், மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கல்லூரி மாணவியை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் நண்பர் அனூப் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
கல்லூரி மாணவிக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாக கூறி தனியாக அழைத்து, பேராசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை காட்டி மிரட்டி மற்றொரு பேராசிரியர் உட்பட இருவர் மாணவியை சீரழித்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. இதில் தொடர்புடைய மூன்று பேர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
Bangalore,Karnataka
July 16, 2025 2:15 PM IST
கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த பேராசிரியர்..! வீடியோ காட்டி மேலும் இருவர் செய்த கொடூரம்
[]
Source link