Last Updated:
கிரிக்கெட் மேட்ச்சை பார்ப்பதற்கு கூட்டமாக செல்கிறார்கள். அங்கு நெரிசல் ஏற்படுவதில்லை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பரப்புரைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் 10 பேர் உள்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டது.
தற்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ரூ. 20 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை அழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள நடிகர் அஜித் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது-
கூட்ட நெரிசல் சம்பத்திற்கு அந்த தனி நபரை மட்டுமே காரணமாக சொல்ல முடியாது. எல்லோரும் அதற்கு பொறுப்பு. கிரிக்கெட் மேட்ச்சை பார்ப்பதற்கு கூட்டமாக செல்கிறார்கள். அங்கு நெரிசல் ஏற்படுவதில்லை. ஏன் தியேட்டர்களிலும், சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சியிலும் ஏற்படுகிறது?
ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி நாம் யார் என்பதை காட்டக்கூடிய சமுதாயமாக மாறிவிட்டோம். இது முடிவுக்கு வர வேண்டும்.
அதனால் என்ன ஏற்படுகிறது என்றால், ஒட்டுமொத்த திரைத்துறையும் மோசமாக சித்தரிக்கப்படுகிறது. நாங்கள் அதை விரும்பவில்லை. ரசிகர்களின் அன்பை விரும்புகிறோம். அதற்காகத்தான் கடினமாக உழைக்கிறோம். ரசிகர்கள் அன்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன. என்று தெரிவித்தார்.
October 31, 2025 10:29 PM IST
[]
Source link








