
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ், ”பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
தலைவர் பொறுப்பு தொடர்பாக ராமதாஸ் ஆதரவாகவும், அன்புமணிக்கு ஆதரவாகவும் பாமகவிலும், வன்னியர் சங்கத்திலும் குரல் எழுந்தன. அதன்படி இந்த அறிவிப்பு வந்ததும், வன்னியர் சங்க தலைவர் அருள் மொழி ராமதாஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதேபோல், பாமகவின் பொருளாளர் திலகபாமா, “பாமகவில் கட்சியில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ராமதாஸ் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியானது. ஆனால், இந்த முடிவு தவறு” எனத் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : மாநில சுயாட்சி: எதற்காக அமைக்கப்பட்டது ராஜமன்னார் குழு.. அந்தக் குழு அளித்த பரிந்துரைகள் என்ன?
பொருளாளர் திலகபாமாவின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமகவின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், “பாமக பொருளாளர் திலகபாமா சிறிதும் பொருளற்ற முறையில் சிறுபிள்ளைத் தனமாக ராமதாஸ் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பாமகவின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது.
ராமதாஸை ஜனநாயக படுகொலை செய்தவர் என்று வஞ்சக எண்ணத்தோடு சொற்களை அள்ளி வீசிய திலகபாமாவை வன்மையாக கண்டிக்கிறேன். கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாஸை வசைபாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியில் இருந்து வெளியேறி விடுவதுதான் நல்லது” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இப்படியாக பாமகவுக்குள் சலசலப்புகள் எழுந்துவந்த அதேவேளையில், ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமாதான பேச்சுவார்த்தைகளையும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மேற்கொண்டனர். இதில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி இருவருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் ஐந்தாவது நாளாக பாமக கௌரவ தலைவர் ஜிகே.மணி மருத்துவர் ராமதாசை சந்திக்க இன்று தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே.மணி, “வருகின்ற மே-11ஆம் தேதி சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு குறித்து மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரோடு நிர்வாகிகளோடு பேசி திட்டமிட்டு வருகிறார்கள். இந்த மாநாடு வெற்றிகரமாக நடத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. நீங்கள் எதிர்பார்க்கிற பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வருகிற நிலையில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு மாநாட்டில் பேசுவார்கள். நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு எந்த சலசலப்பும் இல்லை. சுமூக நிலைக்கு வந்துள்ளது.
கட்சியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்லி இருக்கிறார்கள். அவற்றிற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக அது குறித்து நான் பேசக்கூடாது” எனத் தெரிவித்தார்.
April 15, 2025 8:46 PM IST
[]
Source link