ராமேசுவரம்: கச்சத்தீவை சுற்றுலாத் தலமாக்க இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிபர் அநுர குமார திசாநாயக்க கடந்த வாரம் கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது உடன் சென்ற அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அதிபரின் கச்சத்தீவு பயணம் குறித்து, “இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவுக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அதனை கச்சத்தீவு வரை நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது” என்றார்.
இது குறித்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜெபரட்ணம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கச்சதீவு புனிதமான ஒரு தீவு. அங்கே புனித அந்தோணியாரின் திருத்தலம் உள்ளது. இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடி புனித அந்தோணியாரின் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். கச்சத்துவை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றப்படுவதை நாங்கள் எந்த விதத்திலும் விரும்பவில்லை.
புனித தலத்தினுடைய புனிதத்துவம் நிச்சயமாக பாதுகாக்கப்பட வேண்டும். கச்சத்தீவு, யாழ்ப்பாணம் மறைமாவட்டத்துக்கு கீழே வருகின்ற திருத்தலமாக உள்ளது. ஆகவே அதிபர் அநுர குமார திசாநாயக்க இதுகுறித்து யாழ்ப்பாணம் மறை மாவட்டத்துடன் கலந்துரையாடுவார் என்று நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.






