ஏற்காடு மலைப்பாதைகளில் செல்ல சுற்றுலா வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது.
வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கியதும் சேலம் மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை பெய்தது. குறிப்பாக, சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு மற்றும் மலைக் கிராமங்களில் தொடர் மழை பெய்ததால் சேலம்- ஏற்காடு, குப்பனூர்- ஏற்காடு என 2 சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக சாலையில் ஆங்காங்கே பாதிப்புகளும், குப்பனூர்- கொட்டச்சேடு இடையே மலைப்பாதையின் தடுப்புச் சுவர் ஓரிடத்தில் சரிந்தும் பாதிக்கப்பட்டது. மேலும், மலைக் கிராம சாலைகளும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மழையின் தாக்கம் நீடித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 22-ம் தேதி மாலையில் இருந்து 24-ம் தேதி வரை ஏற்காடு செல்லும் சேலம்- ஏற்காடு, குப்பனூர்- ஏற்காடு சாலைகளில் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, சேலம் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழையின் தாக்கமின்றி வறண்ட வானிலை நிலவியது. ஏற்காட்டிலும் மழையின் தாக்கம் இல்லாமல் இருந்தது. இதனிடையே ஏற்காடு மலைப்பாதைகளில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இந்நிலையில், ஏற்காடு மலைப்பாதைகளில் சுற்றுலா வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதால் சேலம்- ஏற்காடு, சேலம்- குப்பனூர் சாலை வழியாக, சுற்றுலா வாகனங்கள் செல்வதற்கு போலீஸார் நேற்று அனுமதி அளித்தனர். தொடர்ந்து, இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்கள் வழக்கம் போல ஏற்காடு சென்று வரத்தொடங்கின.
அருவியில் குளிக்க அனுமதி: தொடர் மழை காரணமாக, ஆத்தூரை அடுத்த முட்டல் சுற்றுலாத் தலத்தில் உள்ள ஆணைவாரி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அருவியில் நீர் வரத்து சீராக இருப்பதால், அதில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது.
