
சேலம்: ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி நடைபெற்ற செல்லப் பிராணிகள் கண்காட்சியில், வளர்ப்பு நாய்கள் பல்வேறு சாகசங்களை செய்து சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தின. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஏற்காடு ஏரியை ஒட்டியுள்ள திறந்தவெளி அரங்கில் நேற்று செல்லப் பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்பட்ட இக்கண்காட்சியில், கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம், அல்சேஷன், ஜெர்மன் ஷெப்பர்ட், டாபர்மேன் வகை நாய்கள் பங்கேற்றன.
மேலும், காவல் துறையின் மோப்ப நாய்களும் பங்கேற்று, பராமரிப்பாளரின் கட்டளைகளைக் கேட்டு, அவற்றுக்கேற்ப செயல்பட்டன. மறைத்து வைக்கப்பட்ட பொருளை கண்டுபிடித்துக் கொடுப்பது உள்ளிட்ட சாகசங்களை நிகழ்த்தின.

பாய்ந்து சென்று சாகசம் செய்த நாய்
இதில், சேலம் எஸ்.பி. கவுதம் கோயல் பராமரித்து வரும் ஜெர்மன் ஷெப்பர்ட் முதல் பரிசும், மாநகர காவல் துறையின் டாபர்மேன் 2-வது பரிசும், சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் லேப்ரடார் 3-வது பரிசும் வென்றன.
மேலும், செல்லப் பிராணிகள் கண்காட்சியில் வளர்ப்புப் பூனைகள், நாட்டின மாடு, எலிகளும் பங்கேற்றன. குறிப்பாக, புங்கனூர் குட்டை காளை மாடு, வலம்புரி ஆடு, சண்டைக் கிடா போன்றவை பார்வையாளர்களைக் கவர்ந்தன. ஞாயிறு விடுமுறை என்பதால் ஏற்காட்டில் நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் திரண்டனர்.
இதனால் மலைப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேநேரத்தில், நேற்று நண்பகல் வேளையிலும் கடும் பனி மூட்டம் நிலவியது, சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தியது.