
ஊட்டி: கண்ணைக் கவரும் வகையில், ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்துச் செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவின் 100-வது ஆண்டு நினைவாக 1995-ம் ஆண்டு 10 ஏக்கர் பரப்பில் ஊட்டி ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இப்பூங்காவைத் திறந்துவைத்தார்.
முதலில் பல்வேறு வகையான 1,500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டன. பின்னர் செடிகளின் எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்ந்தது. கடந்த 2006-ம் ஆண்டு ஜப்பான் ஒசாகா நகரில் நடந்த சர்வதேச ரோஜா மாநாட்டில் ‘கார்டன் ஆப் தி எக்ஸலன்ஸ்’ விருதுக்கு இப்பூங்கா தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், பூங்கா மேலும் 2 ஏக்கர் விரிவுபடுத்தப்பட்டு 200 புதிய ரக ரோஜாக்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது இந்தப் பூங்காவில் 4,000 ரகங்களில் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. கோடை சீசனை முன்னிட்டு, பூங்காவில் உள்ள செடிகள் கவாத்து செய்யப்பட்டு, உரமிடப்பட்டன. தற்போது, பூங்காவில் பல வண்ண ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
கோடை மழை பெய்யாத நிலையில், செடிகளுக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. ரோஜாக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்துச் செல்கின்றனர்.