ஊட்டி சுற்றுலா A to Z கைடன்ஸ்: என்ன பார்க்கலாம்… எப்படி போகலாம்..? | Ooty Invites You to Celebrate Summer Vacation: What to see and How to go explained

Spread the love


இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் புகழ்பெற்றதும், உலக சுற்றுலா வரைப்படத்தில் இடம் பெற்றது ஊட்டி. நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பச்சை நிற கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கும் புல் வெளிகள், வனப் பகுதிகள், எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள், நீர் வீழ்ச்சிகள், அணைகள் மற்றும் காய்கறி தோட்டங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இது தவிர ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் உள்ள பூங்காக்கள், ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், நீர்விழ்ச்சி என எங்கு பார்த்தாலும் இயற்கை அழகுடன் காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

கோடை சீசன் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை நடக்கும். இந்த சமயத்தில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், இவர்களை மகிழ்விப்பதற்காக மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு கண்காட்சி மற்றும் போட்டிகள், கலை விழாக்கள் என மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் விழா கொண்டாடப்படுகிறது.

அரசு தாவரவியல் பூங்கா: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அனைத்து சுற்றுலா பயணிகளை கவரும் முதலிடம். இந்த பூங்கா கடந்த 1897ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. நூற்றாண்டு கடந்த இந்த பூங்காவில், பல வகை வண்ண மலர்கள் மட்டுமின்றி, 20 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரம், குரங்குகள் ஏறாத புஷ்சில் மரங்கள், இத்தாலி நாட்டில் உள்ள பூங்காவை போன்ற பூங்கா, ஜப்பான் நாட்டில் உள்ள பூங்காவை போன்ற மிதக்கும் பூங்காக்கள், ஆசிய கண்டத்தில் உள்ள பெரணி வகைகளை கொண்ட பெரணி இல்லம், அனைத்து வகை ஆர்கிட் மலர்களை கொண்ட கண்ணாடி மாளிகை என சுற்றுலா பயணிகளை வியப்பூட்டும் பல விஷயங்கள் தாவரவியல் பூங்காவில் உள்ளது.

ஆண்டு தோறும் மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் புகழ் பெற்ற மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இங்கு அடுத்த மாதம் நடத்தப்படும் மலர் கண்காட்சியில் பல லட்சம் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். இப்பூங்கா ஊட்டி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சுற்று பேருந்து, நகர பேருந்து மற்றும் ஆட்டோக்களில் செல்லலாம். கோவை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பேருந்துகளின் மூலமும், நீலகிரி மலை ரயிலின் மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வரலாம். சென்னையில் இருந்து ரயில் மூலமாகவோ அல்லது பேருந்துகளின் மூலமாகவோ எளிதாக ஊட்டி வரலாம்.

ரோஜா பூங்கா: ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சியின் நூற்றாண்டை முன்னிட்டு ஊட்டியில் ரோஜா பூங்காவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். ஊட்டி ரோஜா பூங்காவும் நகரின் மத்திய பகுதியிலேயே அமைந்துள்ளது. இந்த நூற்றாண்டு ரோஜா பூங்காவில், 4 ஆயிரம் ரோஜா வகைகள் உள்ளன. சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன.

ஆண்டு தோறும் இங்கு மே மாதம் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ரோஜா பூங்காவில், எங்கும் காண முடியாத நீலம், ஊதா, பச்சை நிறங்களை கொண்ட ரோஜா மலர்களும், ஹைபிரிட் ரோஜாக்கள், மினியேச்சர் ரோஜாக்கள் போன்ற வகைகளை சேர்ந்த ரோஜா மலர்கள் அதிகளவு நடவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, ஊட்டி படகு இல்லம் எதிரே மரவியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா புதிதாக உருவாக்கப்பட்டாலும், இங்கு சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க பல வகை மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ரோஜா பூங்கா மற்றும் மரவியல் பூங்காவிற்கு ஊட்டி மத்திய பேருந்து நிலையம், ஏ.டி.சி., மற்றும் சேரிங்கிராஸ் போன்ற பகுதிகளில் இருந்து எளிதாக ஆட்டோக்களின் மூலம் செல்லலாம்.

தொட்டபெட்டா சிகரம்: மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடமும், இந்தியாவின் உயர்ந்த சிகரமுமான தொட்ட பெட்டா கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 623 மீட்டர் உயரம் கொண்டது. இங்கிருந்து நீலகிரியின் பெரும்பாலான இடங்களை காணமுடியும். குறிப்பாக, சூரியன் மேற்கில் மறைவதை காண இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். தொட்ட பெட்டா சிகரத்துக்கு ஊட்டியில் இருந்து 10 கி.மீ., தூரம் உள்ளது. இதனை தனியார் கார்கள், சுற்று பேருந்துகளில் சென்று காண முடியும்.

சிம்ஸ் பூங்கா: குன்னூர் சிம்ஸ் பூங்காவில், பல வகை மரங்கள், மலர் செடிகள், சிறிய படகு இல்லம் ஆகியன உள்ளன. இந்த பூங்காவில் உள்ள ருத்ராட்ச மரம் மிகவும் பிரசித்திப் பெற்றது. மேலும், இந்த பூங்காவில் குறிஞ்சி மலர்கள், காட்டு சூரியகாந்தி பூ செடிகள் ஆகியன சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும் கோடை விழாவின் போது, பழக் கண்காட்சி நடத்தப் படுகிறது. இதில், ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துக் கொள்வது வழக்கம். 9 மணி முதல் மாலை 6 மணி வரை படகு சவாரி செய்யலாம்.

ஊட்டியில் இருந்து 22 கி.மீ., தொலையில் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி ஆகியவை உள்ளன. இது தவிர, ஊட்டி – மைசூர் சாலையில் 13 கி.மீ., தொலைவில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க கல்லட்டி நீர்வீழ்ச்சி, குன்னூரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள லாஸ் நீர்வீழ்ச்சி, குன்னூர் – குந்தா செல்லும் சாலையில் காட்டேரி நீர் வீழ்ச்சி, ஊட்டி – கூடலூர் செல்லும் வழித்தடத்தில் உள்ள பைக்காரா நீர் வீழ்ச்சி, கோத்தகிரி – மேட்டுப்பாளையம் செல்லும் வழித்தடத்தில் உள்ள கேத்ரின் நீர்விழ்ச்சி, மாயார் நீர் வீழ்ச்சி என பல நீர் வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

முதுமலை: ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ள இடம் தான் முதுமலை புலிகள் காப்பகம். முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி மற்றும் ஜங்கிள் ரெய்டு ஆகியன உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகளை வனத்துறை அழைத்து சென்று யானை, புலி மற்றும் சிறுத்தை போன்ற வன விலங்குகளை காண்பித்து வருகின்றனர். முதுமலைக்கு மைசூரில் இருந்து எளிதாக வர முடியும்.

கோவை, சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி வந்த பின், ஊட்டியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள மசினகுடி பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்த கூடலூர் செல்லும் அரசு பேருந்துகளின் மூலம் தெப்பக்காடு பகுதிக்கு சென்று முதுமலையை கண்டு ரசிக்கலாம். மேலும், மசினகுடி பகுதியில் உள்ள தனியார் வாகனங்களில் முதுமலை சென்று அங்குள்ள இயற்கை அழகையும், வன விலங்குகளையும் கண்டு ரசிக்கலாம்.

நீலகிரி மலை ரயில்: இந்த சுற்றுலா தலங்களையெல்லாம் காண யுனஸ்கோவிடம் ‘பாரம்பரிய’ அந்தஸ்தை பெற்ற நீலகிரி மலை ரயில் மூலமே அதிகமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகின்றனர். அடர்ந்த காடுகளின் நடுவே வளைந்து நெலிந்து வரும் இந்த ‘குட்டி’ ரயிலில் பயணிக்க நம் நாட்டை சேர்ந்தவர்களை விட வெளி நாட்டவர்களே அதிகம் விரும்புகின்றனர்.

மேலும், கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு காட்சி முனை உள்ளது. கோத்தகிரியில் இருந்து 20.கி.மீ., தூரம் பயணித்தால் கோடநாடு காட்சி முனையை அடையலாம். இங்கிருந்து தெங்குமரஹாடா, பவானி அணை மற்றும் ரங்கசாமி மலை ஆகியவைகளை காணலாம். கூடலூர் அருகே ஊசி மலை காட்சி முனை, தவளை மலை காட்சி முனை ஆகியவைகள் உள்ளன. கூடலூரில் இருந்து 10 கி.மீ.,ரும், ஊட்டியில் இருந்து 40 கி.மீ., தூரம் பயணித்தால் இந்த காட்சி முனைகளை அடையலாம். மேலும், டால்வின் நோஸ் காட்சி முனை, லேம்ஸ் ராக் காட்சி முனை ஆகியன உள்ளது. இவைகளை குன்னூர் பகுதியில் இருந்து தனியார் வாகனங்கள் மற்றும் அரசு சுற்று பேருந்துகளின் மூலம் சென்று பார்க்கலாம்.

எப்படி ஊட்டிக்கு போகலாம் – சென்னை, மதுரை, திருச்சி உட்பட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ரயில்கள் மூலம் கோவை அல்லது மேட்டுப்பாளையத்திற்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் வரலாம். அங்கிருந்து மலை ரயில் மூலம் குன்னூர் மற்றும் ஊட்டிக்கு செல்லாம். மேலும் கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக போக்குவரத்து கழகம் கோடை காலத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்துகளை இயக்குகிறது.

குறிப்பாக கோவையில் இருந்து ஊட்டிக்கு அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து ஊட்டிக்கு 88 கி.மீ., மட்டுமே. மேட்டுப்பாளையத்தில் இருந்து 54 கி.மீ., தூரமும், ஈரோட்டில் இருந்து ஊட்டிக்கு 135 கி.மீ., தூரம் மட்டுமே உள்ளது. ஊட்டி வந்த பின் தங்களது வசதிக்கேற்ப தனியார் வாகனங்களின் மூலமாகவோ அல்லது சர்க்கியூட் பேருந்து எனப்படும் சுழற்சி முறையில் குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தலங்களை சுற்றி வரும் அரசு பேருந்துசில் சென்று சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கலாம். தனியார் வாகனங்களில் வருபவர்கள் சுற்றுலா வழிகாட்டி மூலம் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கலாம்.

தங்கும் வசதி: ஊட்டி மற்றும் குன்னூர் பகுதியில் ஏராளான லாட்ஜ், ஹோட்டல்கள் மற்றும் காட்டேஜ்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.15 ஆயிரம் வரை ஒரு அறைக்கு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், தங்களது வசதிக்கேற்ப அறைகளை எடுத்துக் கொண்டு தங்கிக் கொள்ளலாம். ஹோட்டல்கள் மற்றும் காட்டேஜ்களிலேயே சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கவும் வாகன வசதிகள் செய்து தரப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு குறிப்பட்ட தொகை வசூலிக்கப்பட்டு அனைத்து சுற்றுலா தலங்களையும் காண்பிக்கும் பேக்கேஜ் டூர் முறையும் உள்ளது.

உணவு வகைகள் – ஊட்டியை பொறுத்தவரை அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும். சைனீஸ், பஞ்சாபி, வட இந்திய, தென்னிந்திய வகையான உணவு வகைகள் கிடைக்கும். நட்சத்திர ஹோட்டல்களில் இந்த அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும். சாதாரணமாக இந்த வகை உணவுக்காக பிரத்யேக உணவகங்கள் உள்ளன. இவைகளில் சென்று சுற்றுலா பயணிகள் ருசிக்கலாம். சைனீஸ் உணவிற்காக புகழ் பெற்ற ‘ஷின்க்ஹவுஸ்’ உள்ளது. இது சீனா தம்பதிகளால் நடத்தப்பட்டு வருகிறது.

என்னென்ன வாங்கலாம் – ஊட்டி வர்க்கி மிகவும் பிரபலமானது, அதே சமயம் ருசியானது. இதனை வாங்கி ருசிக்கலாம். இந்த வர்க்கி அனைத்து பேக்கரி மற்றும் கடைகளில் ஊட்டியில் கிடைக்கும். வால் பேரி, பிளம்ஸ், பீச், ஸ்டராபெரி பழங்கள் ஆகியவைகளும் கிடைக்கும். இவை அனைத்தும் நீலகிரி மற்றும் கொடைகானல் போன்ற மலை பிரதேசங்களில் மட்டும் விளையக்கூடியவை. இது தவிர வயதானவர்களுக்கு கால் மற்றும் மூட்டு வலியை தீர்க்க கூடிய நீலகிரி தைலம் குறைந்த விலையில் வாங்கலாம். இவைகள் அனைத்து கடைகளிலும் ஊட்டியில் கிடைக்கும்.

மழைக் காலங்களில் பயன்படுத்தக் கூடிய ஸ்வெட்டர், ஜெர்க்கின், மழை கோட்டு போன்றவைகளை குறைந்த விலையில் ஊட்டியில் வாங்கலாம். பல்வேறு வகையான பூக்களின் நாற்றுக்கள், ரோஜா செடிகள், பூ விதைகள் ஆகியவைகளை வாங்கலாம். இவைகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்காக்களில் குறைந்த விலையில் வாங்கலாம். அது தவிர தனியார் நர்சரிகளிலும் வாங்க முடியும். பூக்கள் மற்றும் பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஜாம் வகைகள், பழரசங்கள், உறுகாய் போன்றவைகளும் இந்த பூங்காக்களில் குறைந்த விலையில் வாங்கலாம்.





Source link


Spread the love
  • Related Posts

    ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

    Spread the love

    Spread the love      வாஷிங்​டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம்…


    Spread the love

    Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா Sollathigaram Debate | பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் வியூகம்சாத்தியமா? சவாலா? | Bihar Election Results 2025 | Sollathigaram Debate Follow US :…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *