
நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் முதலில் செல்ல விரும்புவது நீலகிரி மலை ரயில் பயணத்தை தான்.
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இந்த மலை ரயில் 16 குகைகள், 200 வளைவுகள், 257 பாலங்களை கடந்து பயணிக்கிறது. இந்த ரயிலில் பயணிப்பது ஒரு த்ரில்லிங் அனுபவம் என்கின்றனர். ஒரு காலத்தில் படு ஈசியாக இந்த மலை ரயிலில் பயணித்துவிடலாம். தற்போது இந்த ரயிலில் பயணிப்பது என்பது குதிரை கொம்பாகிவிட்டது. அதிலும் கோடை சீசன் நேரத்தில் இந்த ரயில் பயணம் என்பது சாத்தியமில்லை. ஆன்லைன் முன் பதிவு வந்த பின் இரண்டு மாதங்களுக்கு முன்பே அனைத்து இருக்கைகளும் புக் ஆகிவிடுவது சகஜமாகிவிட்டது. உதகை வரும் சுற்றுலா பயணிகள் ஜெனரல் கம்பார்ட்மெண்டில் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் தவிப்பதை தினமும் பார்க்கமுடிகிறது.
மலைகளின் அரசியின் ஆபரணம் எனப்படும் மலை ரயில் 1899-ம் வருடம் ஜூன் 15-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு தன் முதல் பயணத்தை தொடங்கியது. சுவிஸ் பொறியாளர்களின் அறிய கண்டுபிடிப்பான நிலக்கரி நீராவி இஞ்ஜின் ‘ஜிக்கு புக்கு ஜிக்கு’ என்று மலையில் ஊர்ந்து வந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் அன்றைய நீலகிரி வாசிகள்.
1908-ம் ஆண்டு உதகை புனித மேரிஸ் ஹில் பகுதியில் கட்டப்பட்ட அழகான ரயில் நிலையத்திற்கு முதல் முறையாக மலை ரயில் வந்து சேர்ந்தது. தன் 125 வருட பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த மலை ரயிலுக்கு 2005-ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரத்தை யுனெஸ்கோ வழங்கியது.
முதன் முதலில் சுவிஸ் பொறியாளர்களால் பிரிட்டிஷ் மெட்ராஸ் ரயில்வே கம்பெனி உருவாக்கின மலை ரயில் இது. ஒரு காலத்தில் மேட்டுப் பாளையத்தில் இருந்து இரண்டு ரயில்கள் தினமும் உதகை வரை வந்து செல்லும். குன்னூரில் இருந்து உதகைக்கும், உதகையில் இருந்து குன்னூருக்கும் தினமும் இரண்டு மணிக்கு ஒரு ரயில் என்று பயணித்த காலங்கள் உண்டு.
மீன் ரயில், மெயில் ரயில், கூட்ஸ் ரயில், உதகை குதிரை பந்தய குதிரைகள் வந்து செல்ல பிரேத்தியேக ரயில் பெட்டிகள் இருந்தன. அதில் குதிரைகள் பயணித்து வந்து போவது அழகான காட்சியாக உதகை சீசன் சமயத்தில் இருந்தது. குன்னூரில் ஒரு ரயிலும், உதகையில் ஒரு ரயில் இரவில் தங்கும்.
காலை இரண்டு மார்க்கமாக அரசு ஊழியர்கள், பணியாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த ரயிலில் பயணிப்பார்கள். தற்போது எல்லாம் கனவாகிப்போய் உதகை பாரம்பரிய ரயில்வே வளாகம் சின்னாபின்னமாகி ஒரு சிறிய மலை ரயில் நிலையம் பெரிய ரயில்வே ஜங்ஷன் போல மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மலை ரயிலின் இஞ்ஜின்கள் பாரம்பரிய வரலாற்று சிறப்பு மிக்கவை. ஆரம்பத்தில் 13 நிலக்கரி நீராவி இன்ஜின்கள் மகாராணி போல மலைகளின் அரசியின் மேல் தவழ்ந்து பயணித்துக் கொண்டிருந்தன. தற்போது 7 டீசல் இஞ்ஜின்கள், 2 நிலக்கரி பயர் இஞ்ஜின்கள் மற்றும் 5 டீசல் இஞ்ஜின்கள் பயணத்தில் உள்ளன. மூன்று இஞ்ஜின்கள் பயணத்துக்கு ஏற்றதல்ல என்று உதகை ரயில் நிலையத்திலும், குன்னூர் ரயில் நிலையத்திலும், கோவை ரயில் நிலையத்திலும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மலை ரயில் உள்ளூர் வாசிகளுக்கும், மாணவர்களுக்கும் எட்டாக் கனியாகிவிட்டது. மலை ரயில் அறக்கட்டளை நிறுவனர் நடராஜன் கூறியதாவது: நீலகிரி மலை ரயில் உலக பிரசித்தி பெற்றது. பல வருடங்களாக கோடை மாதங்களில் சிறப்பு ரயில் ஏப்ரல் 15 முதல் ஜூலை மாதம் வரை தினமும் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை இயக்கி வந்தனர். இந்த ஆண்டு கோடை சீசன் சிறப்பு ரயில் மார்ச் 28 முதல் ஜூலை 7ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மக்களுக்கு தங்கள் மாவட்டத்தில் உள்ள ரயில் வசதியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நீலகிரி எக்ஸ்பிரஸுக்கு சென்னை செல்ல டிக்கெட் பெற முடியவில்லை. நீலகிரி குழந்தைகள் எப்போதாவது நீராவி இன்ஜினை பார்த்துள்ளனரா?. மேலும், உதகையிலிருந்து குன்னூருக்கு ரயில் இருப்பதே பலருக்கு தெரியாது. பலர் மறந்தே விட்டனர். நீலகிரி மாணவர்களுக்கு மலை ரயிலில் எந்த தள்ளுபடி மற்றும் பாஸ் இல்லை. பள்ளி மாணவர்கள் ரயில் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்த்ததில்லை.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரே ஒரு ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. நீலகிரி வாசிகளுக்கு சாதாரண கட்டணத்தில் பயணிக்க டிக்கெட் வழங்கவேண்டும். நீலகிரி மலை ரயிலில் சென்னைக்கு நேரடி ஒற்றை முன்பதிவு வசதி செய்து கொடுக்கவேண்டும். வார இறுதி நாட்களில் மாணவர்கள் பயணிக்க கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்.
அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தினம் பயணம் செய்ய சீசன் டிக்கெட் சாதாரண கட்டணத்தில் வழங்கி காலையும், மாலையும் பழைய படி உதகையில் இருந்து ஒரு ரயில், குன்னூரில் இருந்து ஒரு ரயில் ஒரே நேரத்திற்கு புறப்பட செய்ய வேண்டும். உதகை, குன்னூர் இடையே கூடுதல் ரயில் இயக்க வேண்டும்’ என்றார்.