
உதகை: பைக்காராவில் தண்ணீர் இருப்பு குறைந்த நிலையிலும் படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் நகரிலுள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா ஆகிய சுற்றுலா தலங்களை மட்டுமின்றி, நகருக்கு வெளியே உள்ள பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி, அப்பர்பவானி உள்ளிட்ட சுற்றுலா தலங்களையும் காண ஆர்வம் காட்டுகின்றனர்.
அதன்படி, உதகையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் கூடலூர் சாலையில் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி அமைந்துள்ளன. அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பைக்காரா படகு இல்லத்தில் 30 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், எட்டு இருக்கை மோட்டார் படகுகள் 19, பத்து இருக்கை மோட்டார் படகு ஒன்று, 15 இருக்கை மோட்டார் படகு ஒன்று, மூன்று இருக்கை அதிவேக படகுகள் 7 என்ற எண்ணிக்கையில் உள்ளன.
இதுதவிர, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 5 இருக்கை கொண்ட ஓர் உல்லாச படகு, இரண்டு ‘வாட்டர் ஸ்கூட்டர்’ ஆகியவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் மின் உற்பத்திக்காக பைக்காரா அணை கட்டப்பட்டது.
இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள இந்த அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்துவிடும்போது, வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடும். குறிப்பாக, பாறைகளின் நடுவே ஆற்றில் வெள்ளம் செல்லும் காட்சி, பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும்.
தற்போது, நாள்தோறும் பைக்காரா நீர் மின் நிலையத்தில் 2 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், பைக்காரா அணையில் இருப்பு குறைந்து, தண்ணீர் வெளியேற்றப்படுவதும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீரின்றி, சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, அணையின் முழு கொள்ளளவான 110 அடியில் தண்ணீர் இருப்பு 64 அடியாக உள்ளது.
இதுதொடர்பாக பைக்காரா படகு இல்ல ஊழியர்கள் கூறும்போது, “பருவ மழை போதுமான அளவு பெய்து, அணை முழுமையாக நிரம்பியது. இந்நிலையில், தற்போது மின் உற்பத்தி காரணமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், அணையில் நீர் குறைந்துள்ளது. இருப்பினும், படகு சவாரி செய்வதில் சிக்கல் இல்லை. படகு இல்லத்தில் வழக்கம்போல் படகுகள் இயக்கப்படுகின்றன” என்றனர்.