Last Updated:
Annamalai : இஸ்லாமியப் பெண்களின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடியும், பாஜகவும் செயல்படுவதாகவும், ஆனால், அரசியல் காரணங்களுக்காக பாஜகவைப் பற்றி பிறர் விமர்சிப்பதை ஏற்க வேண்டாம் என்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.
பாஜக-வை பற்றி புரியாதவர்களும், தெரியாதவர்களும் அரசியல் காரணங்களுக்காக பாஜக மாநில தலைவரும், பாஜகவினரும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கருதுகிறார்கள். தமிழக பாஜக-வில் சிறுபான்மையினர் ஒரு அங்கமாக இருந்து வருகின்றனர். பலர் நீண்டகாலமாக பொறுப்புகளிலும் இருந்து வருகின்றனர். இந்தியாவில் அவரவர் கடவுளை விட்டு கொடுப்பதில்லை. இதைத்தான் இந்தியா விரும்புகிறது. ஆனால், பாஜக-வின் சித்தாந்தத்தை புரிந்து கொள்ளாமல் சிலர் உள்ளனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பாஜக-வில் உள்ள இஸ்லாமியர்களுக்கு தேசியத்தை பற்றியும் முழுமையாக தெரியும். இஸ்லாத்தை பற்றியும் முழுமையாக தெரியும். இந்த கட்சியில் இஸ்லாமியர்களுக்கும் பங்கு உண்டு என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். பாஜக-வில் அங்கம் வகிக்கும் இஸ்லாமியர்கள் பாஜக-வின் வளர்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே துணையாக இருந்திருக்கிறார்கள். ஆனால், தற்போது சில அரசியல் கட்சிகள் இஸ்லாமியர்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.
இந்துகளையும், இஸ்லாமியர்களையும் எதிரும் புதிருமாக வைத்து கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்புக்காகவும், சுதந்திரத்துக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உறுதி செய்து வருகிறார். இஸ்லாம் மதத்தில் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
எல்லா புகழும் இறைவனுக்கே என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன், நோன்பிருக்கும் அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்து, நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்@BJPMahilaMorcha @VanathiBJP அக்கா அவர்களோடு கலந்து கொண்டேன்@BJP4TamilNadu கட்சியின் சிறுபான்மை அணியினரும், pic.twitter.com/9pPyw1eLf6
— K.Annamalai (@annamalai_k) April 26, 2022
மேலும், பாஜக-வில் அனைவருக்கும் இடம் உண்டு. பாஜகவுக்கு குடியரசுத்தலைவரை தேர்வு செய்ய முதல் வாய்ப்பு கிடைத்தபோது இஸ்லாமியரான அப்துல் கலாமை தேர்வு செய்தது. 2ஆவது முறை வாய்ப்பு கிடைத்த போது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தற்போதைய குடியரசுத்தலைவரை தேர்வு செய்தது. இவ்வாறு குடியரசுத்தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம், பாஜக-வின் சித்தாந்தத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என்று அண்ணாமலை கூறினார்.
தமிழக பாஜக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
April 27, 2022 8:04 AM IST







