சென்னை: இலங்கை சுற்றுலாவில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளதாக இலங்கை துணைத்தூதர் கணேசநாதன் கீத்தீஸ்வரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கை சுற்றுலாத் துறை நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயைப் பதிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை 17 லட்சத்து 25,494 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
அதில் இந்தியர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 75 ஆயிரத்து 292 ஆக உள்ளது. இலங்கைக்கு சுற்றுலா வரும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதற்கு இரு நாடுகள் இடையேயான ஆன்மிக, கலாச்சார, மத மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் முக்கியகாரணங்களாகும். மொத்த சுற்றுல ப் பயணிகளில் 22 சத வீதம் பேர் இந்தியாவிலிருந்தே வந்துள்ளனர்.
திரைப்பட படப்பிடிப்பு தொடர்பான சுற்றுலாவை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்களது அரசின் சார்பில் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு வழங்கப்பட்டுள்ளது. லங்கன் ஏர்லைன்ஸ் குறைந்த பயண நேரத்துடன் 9 இந்திய நகரங்களை இலங்கையுடன் இணைக் கும் வகையில் விமான சேவைகளை வழங்குகிறது. அதேபோன்று இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகியவை தென்னிந்தியாவின் பல நகரங் களிலிருந்து இலங்கைக்கு சிறந்த இணைப்பு வசதிகளை வழங்குகின்றன.
முதலீட்டாளர்களுக்கு வரவேற்பு: தென்னிந்தியாவிலிருந்து வணிகரீதியான உறவு வலுப்பட வேண்டும். இந்தியாவிலிருந்து மேலும் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா வர வேண்டும். அதேபோல், இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யவும் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், இந்திய சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்பின் தமிழகப் பிரிவு தலைவர் சி.கே.ராஜா, லங்கன் ஏர்லைன்ஸ் மண்டல மேலாளர் ஃபவுசான் பரீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
