
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 1974-75 ஆகிய ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது சென்னை மாநகரின் அடையாளமாக திகழும் வள்ளுவர் கோட்டம். அதிமுக ஆட்சியின் போது பத்து ஆண்டுகளாக வள்ளுவர் கோட்டம் பராமரிக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. திமுக ஆட்சி மீண்டும் வந்ததும், 80 கோடி ரூபாய் செலவில் வள்ளுவர் கோட்டத்தை புனரமிக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைபெற்றுவந்தன.. தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
அய்யன் வள்ளுவர் கலையரங்கம், தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 20,000 சதுர அடி பரப்பளவில் ஆயிரத்து 548 இருக்கைகள், அதிநவீன வசதிகள் ஆகியவற்றுடன் பிரம்மாண்டமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள குறள் மணிமாடம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உரை விளக்கத்துடன் 1,330 திருக்குறள்களை கொண்ட குறள் பலகைகள் அமைக்கப்பட்டு ஓவியங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ளது.
திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், இலக்கிய விவாதங்கள், ஆவணப்பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 27,000 சதுர அடி பரப்பில் தரை நிலை, தரையின் கீழ் நிலப்பகுதிகளில் 162 கார்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வள்ளுவர் கோட்டத்தைப் பார்வையிட வருகைபுரியும் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் 3,336 சதுர அடியில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
275 சதுர அடி பரப்பளவில் நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையை நோக்கிப் பார்வையாளர்கள் தடையின்றிச் செல்வதற்கு வசதியாக “வேயா மாடம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் தேர் வடிவில் 106 அடி உயரத்தில், திருக்குறள் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கல் தேர், ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தேயக மின் தூக்கி, பேவர் பிளாக் பாதை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானத்தில் சிறப்பு சேர்க்கும் விதமாக மழைநீர் வடிகால் வசதி, 2 லட்சம் கொள்ளளவு நீர் சேமிப்பு தொட்டி, புல்வெளி , செயற்கை நீரூற்று , ஒளி ஒலி காட்சி, பிரமாண்டமான தோரணவாயில் உள்ளிட்டவையும் உருவாக்கப்பட்டுள்ளன.
புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை இன்று மாலை, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.. அதனை தொடர்ந்து குறள் மணிமாடம், திருக்குறள் ஆய்வரங்கம், கல்சிற்ப தேருக்கு சிறப்பூட்டும் வகையில் லேசர் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சிகளை முதலமைச்சர் பார்வையிட உள்ளார்.
மாற்றுதிறனாளிகள் பயன்பெறும் வகையில், 60-க்கும் மேற்பட்ட உத்தரவுகளை பிறப்பித்தற்காக வள்ளுவர் கோட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மாற்றுதிறனாளிகள் பாராட்டு விழா நடத்துகின்றனர்.
June 21, 2025 6:57 AM IST