
Last Updated:
கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த பணியின்போது, 60 வயதுமிக்க கண்ணையா என்ற நபர் ஒருவர் அவரது வீட்டை இடிப்பதை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே சம்பவ இடத்தில் இருந்த போலீசார் கண்ணையாவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கண்ணையா தீக்குளித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இளைஞர்கள் அங்கிருந்த அரசு வாகனங்கள், புல்டோசரின் மீது கற்களை எரிந்து அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் தற்காலிகமாக இடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்களை அகற்றக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது-
சென்னை இராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த வீடுகள் வருவாய்த்துறையினரால் இடிக்கப்படுவதைக் கண்டித்து கண்ணையா என்ற ஏழைப் பாட்டாளி தீக்குளித்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1. சென்னை இராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த வீடுகள் வருவாய்த்துறையினரால் இடிக்கப்படுவதைக் கண்டித்து கண்ணையா என்ற ஏழைப் பாட்டாளி தீக்குளித்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.#NoEviction
— Dr S RAMADOSS (@drramadoss) May 8, 2022
கோவிந்தசாமி நகரில் உள்ள மக்கள் பல பத்தாண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சென்னையின் பூர்வகுடிகள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவர்களின் வீடுகளை இடித்து சென்னையை விட்டு வெளியேற்றுவது மனித உரிமை மீறல்; அதை அனுமதிக்க முடியாது!
கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். தீக்குளித்த கண்ணையாவுக்கு உலகத்தர மருத்துவம் அளித்து அவரை காப்பாற்ற வேண்டும். படுகாயமடைந்த அவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.