
Last Updated:
RA PURAM: ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிராக தீக்குளித்து உயிரிழந்த முதியவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்த சாமி நகர் இளங்கோ தெரு பகுதியில் பக்கிங்காம் கால்வாய் நீர்நிலையை ஆக்கிரமித்து, பல பத்தாண்டுகளாக 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இதில், ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த கண்ணையா என்ற முதியவர் தீக்குளித்தார். உடனடியாக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாமக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக கண்ணையன் இருந்துவந்துள்ளார். அவரது உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் , அரசைப் பொருத்தவரை மனிதாபிமான அடிப்படையிலேயே இருக்கிறோம். பொது மக்கள் அச்சப்படும் அளவிற்கு மாறவில்லை. அவர்களுக்கு உரிய மரியாதையோடு வீடுகள் ஒதுக்கப்படும். கோவிந்தராஜபுரம் பகுதியில் தீக்குளித்து இறந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
இதேபோல், மந்தவெளி, மயிலாப்பூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டி வரும் வீடுகளில், ஆர்.ஏ.புரம் மக்கள் மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள். ஆர்.ஏ.புரம் உயிரிழப்பே கடைசியாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.