Last Updated:
நெட்டி முறிப்பதால் ஆர்த்திரிட்டிஸ், எலும்பு தேய்மானம் ஏற்படுமா? மருத்துவர்கள் சொல்லும் உண்மை என்ன?
கை விரல்களில் நெட்டி முறிப்பது பலருக்கும் இயல்பான பழக்கம்தான். இருந்தபோதிலும் ஒருசிலர் எதற்கெடுத்தாலும் நெட்டி முறிப்பதை பார்க்கையில், ‘அச்சோ எலும்பு உடஞ்சுடப்போகுது’ என நமக்கே பதற்றம் வந்துவிடும். அப்படியானவர்களை பார்க்கும் பெரியவர்கள்கூட, ‘இப்படி தொடர்ந்து நெட்டி முறிச்சா எலும்பு பிரச்னை வந்துடப்போகுது’ என எச்சரிப்பார்கள். இப்பழக்கங்கள் யாவும் ஆர்த்ரிட்டீஸ், வலி மிகுந்த நீண்டகால மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்றவற்றை ஏற்படுத்தும் என்ற ஒரு கருத்தும் அதிகம் சொல்லப்படுவது உண்டு.
“நெட்டி முறிக்கும்போது ஏற்படும் சத்தம், எலும்புகள் உடைவதாலோ தசைநார்கள் கிழிவதாலோ ஏற்படுவதல்ல. நமது மூட்டுகளின் உள்ளே சைனோவியல் எனப்படும் திரவம் இருக்கும். இவை எலும்பு – சவ்வு பகுதியை இணைத்துள்ள பகுதியின் உள்ளே இருக்கும். இவையே மூட்டுகளுக்கு வழுவழுப்புத்தன்மையை கொடுக்கும். அந்த வழுவழுப்புத்தன்மைதான், மூட்டுகள் தேய்மானம் ஆகாமல் தடுக்கும். நாம் நெட்டி முறிக்கும்போது, அந்த திரவத்தில் ஒருவகை வாயு குமிழ்கள் உருவாகும். அந்த சத்தம்தான் நாம் கேட்கும் சொடக்கு!
நெட்டி முறித்தல்
பொதுவாக நம்முடைய விரல்களை நீண்டநேரம் அசைக்காமல் வைத்திருந்தால் (தூங்கும் நேரத்தை சொல்லலாம்), எலும்புகளுக்கிடையே சைனோவியல் திரவம் மொத்தமாக சேரும். பின் நாம் நெட்டி முறிக்கும்போது, மூட்டுகளிலுள்ள அழுத்தம் சட்டென குறைந்து, எலும்பு இணைப்புகள் சட்டென விரிவடைந்து வாயு வெளிவரும். இதில் வெளியாகும் நைட்ரஜன் ஏற்படுத்தும் குமிழ்களில் உருவாகும் சத்தம், சொடக்கு. இது இயல்பாக உருவாகும் சத்தம்தான். தீங்கு கொடுக்காது
இந்தப்பழக்கம், அதன் சத்தத்தாலேயே ஒருவகை மன அமைதியை சிலருக்கு கொடுக்கும். இதனால் இப்பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகும் அபாயம் உள்ளது. என்றபோதிலும், ஆர்த்திரிட்டிஸ் போன்ற பாதிப்புக்கு வழிவகுக்காது. அதற்காக இதை கவனமின்றியும் விட முடியாது. காரணம், சத்தத்தை கொடுக்கும் சைனோவியல் திரவம் அடிக்கடி இப்படியான அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுவது வயதானவர்களுக்கு எலும்பு மேலும் பலவீனமடைய காரணமாகலாம். 40 – 45 வயதை கடந்தவர்கள், இப்பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க, கை / கால் விரல்களில் எங்கு நீங்கள் அதிக நெட்டி எடுக்கின்றீர்களோ அப்பகுதிக்கு அழுத்தம் நிறைந்த வேலைகளை கொடுத்து வருவது நல்லது” என்கிறார்கள் மருத்துவர்கள். இத்துடன், கால்சியம் சத்து மிக்க உணவுகளை அதிகம் உட்கொள்வது, எலும்பு ஆரோக்கியத்தை உறுதி செய்ய உதவும். நீண்ட நேரம் ஒரே வேலையை செய்துவிட்டு நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளவர்கள், நெட்டி முறிப்பதற்கு பதில் கைகளுக்கு சற்று ஓய்வு கொடுக்கலாம்.
October 21, 2025 11:33 AM IST
[]
Source link

