Last Updated:
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் மீது சாந்தாவை மிரட்டிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் நீதிபதி சோழியா அவர்கள் இருவரையும் விடுதலை செய்தார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் 11-வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தங்கும் விடுதி உரிமையாளர் சாந்தாவை மிரட்டிய வழக்கில் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோரை விடுதலை செய்து நீலகிரி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் முதல் குற்றவாளியாக சயானும் இரண்டாது குற்றவாளியாக வாளையாறு மனோஜ் என பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கோடநாடு பங்களாவில் கொள்ளையடிப்பதற்கு முன் தினம் உதகையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி திட்டம் தீட்டியது தெரியவந்ததை அடுத்து அந்த விடுதியின் உரிமையாளர் சாந்தாவை காவல்துறையினர் 11-வது சாட்சியாக சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்து சாட்சி அளிக்க கூடாது என்று தன்னை சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு மிரட்டல் விடுப்பதாக கூறி உதகை காவல் நிலையத்தில் சாந்தா புகார் அளித்தார்.
இதையடுத்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் குண்டர் சட்டம் போடப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முறையாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதி சோழியா, சயான், வாளையாறு மனோஜை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
November 28, 2025 12:56 PM IST







